Monday, August 26, 2013

`தலித் கிறிஸ்த்துவர்கள்’ என்ற அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’.. !`தலித் கிறிஸ்தவர்கள்’ என்ற சொல்லாடலே ஆபத்தான ஒன்றாகப் பார்க்கிறேன். இதில் தலித் கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சரியாக படவில்லை. 

இப்படி சொல்வது தலித் அறிவுஜீவிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் என் மீது எரிச்சலை உண்டு பண்ணக்கூடும்.. பரவாயில்லை.. என் பார்வையை பதிவு செய்கிறேன்.. அவ்வளவுதான்.

இந்துமதத்தின் கொடூரமான சாதிய அடுக்குகளிலிருந்து வெளியேறத்தான் மாற்று மதங்களுக்கு செல்கிறார்கள் தலித் மக்கள். கிறிஸ்த்தவ பிள்ளை, கிறிஸ்த்துவ நாடார், கிறிஸ்த்துவ வன்னியர்.. இப்போது தலித் கிறிஸ்த்துவர்கள்.. என்று கிறிஸ்த்துவ மதம்.. இன்று இந்தியாவில் இந்துமதத்தின் அத்தனை அசிங்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு இந்துமதத்தின் மற்றொரு வடிவமாக மாறிவிட்டது.

கிறிஸ்த்துவத்திற்கு மாறினாலும் நாங்கள் தலித்துகளாகவே இருக்கிறோம், அதனால் தான் இடஒதுக்கீடு கோரிக்கை என்கிறார்கள். உங்களை சமமாக மதிக்காத கிறிஸ்த்துவ மதத்திற்கு என்ன எழவுக்கு மாறி நீங்கள் அல்லேலுயா போடணும்.. தூக்கி வீசிட்டு வெளியே போங்க.

இந்த வகையில் இஸ்லாம் மட்டும் அதன் அடிப்படைவாதிகள் காரணமாக இந்து மதத்தின் சாதிய தாக்கம் இல்லாமல் கொஞ்சம் தாக்குப்பிடித்து நிற்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய தலித் மக்கள் இன்று இஸ்லாமியர்களாகவே வாழ்கிறார்கள். அன்று அவர்கள் மதம் மாறியபோது, அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்று கூறி தலித் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று தலித்தாகவேத்தான் இருந்திருப்பார்கள். (தலித் இஸ்லாமியர்கள் என்று உருவாக்கமல் இருக்க இனிமேல் இஸ்லாமிய தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்..)

இடஒதுக்கீட்டுக்காக இன்று தலித் கிறிஸ்த்துவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவதுபோல் நாளை `தலித் இஸ்லாமியர்கள்’ என்ற அடையாளமும் உருவாக்கப்படலாம். இவர்களின் இந்த கோரிக்கை எல்லாம் மறைமுகமாக இந்துமதத்திற்கு பலமளிக்கவே செய்யும்.

இடஒதுக்கீட்டுக்காக இப்படி ஒவ்வொரு மதத்திலும் தலித் என்ற அடையாளத்தை உருவாக்கிக்கொண்டே செல்வார்களானால் அந்த மக்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சாதிய விடுதலைக்கான வாய்ப்பும் தட்டி பறிக்கப்படும். வேண்டுமானால் இப்படி மதம் மாறும் தலித் மக்களுக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கலாம்.

மாறாக இப்படியே இந்து மதத்தின் படி நிலை சாதிய கட்டமைப்பை ஒவ்வொரு மதத்திற்கும் கடத்திக்கொண்டே இருந்தால் காலம் முழுக்க தலித் மக்கள் அசிங்கப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.. அந்த மக்களை வைத்து ஓட்டுப்பொறுக்குபவர்களுக்குவேண்டுமானால் தலித் அடையாள அரசியல் லாபத்தை தரலாம்..

மற்றபடி அந்த மக்களின் சாதிய விடுதலை எந்த காலத்திலும் சாத்தியமாகாது..

- கார்ட்டூனிஸ்ட்.பாலா
10-8-13

அடுத்தவன் பொண்டாட்டியை கரெக்ட் பண்றதுக்காக பாடிஸ்ப்ரே...!இந்தியாவில் சென்ஸார் போர்டுனு ஒண்ணு இருக்கா.. டிவி விளம்பரங்கள் குறித்து கொஞ்சம் கூட கவலைப்பட்டமாதிரி தெரியவில்லை. 

அதுவும் இந்த பாடிஸ்ப்ரே கம்பெனிக்காரனுங்க பண்ற விளம்பரங்கள் எல்லாம் படு ஆபாசமா இருக்கு.
வியர்வை நாற்றத்தை விரட்ட பாடிஸ்ப்ரே அடிங்கனு சொல்றதுக்குப் பதிலா அடுத்தவன் பொண்டாட்டியை கரெக்ட் பண்றதுக்காக பாடிஸ்ப்ரே அடிங்கனு விளம்பரம் செய்றானுங்க..

அதையும் இந்த கூமுட்டை சென்ஸார் போர்டு அனுமதிக்குது..

நம்மப்பயலுகளும் அதை நம்பி வாங்கி காசைக் கரியாக்கிதான் பார்க்கானுங்க.. நாய் தான் துரத்துதே தவிர ஒரு புள்ளையும் எட்டிப்பார்க்க மாட்டேங்குது..

பெண்கள் ஒரு பாடிஸ்ப்ரேக்கு மயங்கி போறமாதிரி இழிவுப்படுத்துறாங்க..
(பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கப்பா.. காணோம்.. :))

பாரத நாடு.. கலாச்சாரம்.. பண்பாடுனு பேசுற காவி கம்பெனிப் பயலுக சட்டசபையில உட்கார்ந்துக்கிட்டு பிட்டுப்படம் பார்த்தா இப்படித்தான் விளம்பரம் எடுப்பானுங்க... 

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
19-6-13

பாரதிராஜாவைப் போல் பச்சோந்தியாக இல்லாமல் மணிவண்ணன் பிச்சைக்காரராக இருந்ததே மேல்..!இளையராஜா குறித்தும் மணிவண்ணன் குறித்தும் பாரதி ராஜாவின் கேள்வி பதிலை படித்தபோது அருவருப்பாக இருந்தது. 

உண்மையிலேயே அந்த பதில் சம்பந்தப்பட்ட எவருக்குமே மன உளைச்சலை உண்டு பண்ணியிருக்கும்.

மணிவண்ணன் அவர்களை ஈழம் சார்ந்த கூட்டங்கள் புத்தக வெளியீடுகளில் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. நல்ல புத்தக வாசிப்பாளர் என்பது அவரது பேச்சின் மூலம் அறிய முடியும்.

அவர் வெளியே தெரியாமல் பல்வேறு தோழமை அமைப்பினருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார் என நண்பர்கள் சொல்வதுண்டு. அதனாலும் கூட அவர் மீது மரியாதை உண்டு. அமைதிப்படை படத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு அவரைப் பிடிக்கும் சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட.

சாகும் வரை மணிவண்ணன் தான் நம்பிய கொள்கைக்கு நேர்மையாகவே இருந்தார் என்பதற்கு புலிக்கொடி போர்த்திய அவரின் உடலே சாட்சி.

ஆனால் மணிவண்ணனை பிச்சைக்காரன் என்று எழுதிய பாரதிராஜாவின் யோக்கியதை என்ன...?

ஈழப்போரின் இறுதிகட்டத்தில் சீமானை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது, போலீசை ஏவி ஈழம் என்ற சொல்லே வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டது என்று எங்கு பார்த்தாலும் கருணாவின் அடக்குமுறை அதிகமாக இருந்த நேரம்.

அப்போது, அருள்எழிலன், அருள் செழியன், வழக்கறிஞர் ராவணன் உள்ளிட்ட சில நண்பர்கள் பாரதிராஜாவைக் காண ஜெமினி பாலம் அருகே இருக்கும் அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தோம்.அந்த சந்திப்பு நண்பர்களுக்கு மிகுந்த அவமானகரமானதாக இருந்தது. மறுநாள் அவர் கருணாவை சந்தித்து சால்வை போர்த்தியதாக ஞாபகம்.

கேவலம் ஒரு டிவி ஸ்லாட்டுக்காக எந்த சூழலிலும் கருணாவை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. ஈழப்போரை நிறுத்தக்கோரி இயக்குனர்கள் சங்கம் சார்பாக நடந்த கூட்டத்தில் கவிஞர் தாமரை கருணாநிதி பற்றியும் பற்றி பேச ஆரம்பித்த உடனே அவரிடமிருந்து மைக்கை பிடிங்கிக் கொண்டார். அதிகாரத்திற்கு எதிராக யாரும் பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தன்னுடைய அடையாளமாக இன்னும் சாதியை தாங்கிப் பிடித்து நிற்கிறார்.

பாரதி ராஜாவைப் போல் சாதி வெறியனாகவும் பச்சோந்தியாகவும் இல்லாமல் மணிவண்ணன் பிச்சைக்காரராக இருந்ததே மேல்.. 

தோழர்.மணிவண்ணனுக்கு வீர வணக்கம் ..

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
15-6-13

https://www.youtube.com/watch?v=NVs2QMcJX6k

இந்த பாவி மேலயும் ஆண்டவரை நீங்க இறங்க வைக்கணும்..டிவி சேனலை மாத்துனப்போ கண்ணுல பட்டுச்சு. மேடைல நிற்கும் ஒருவர் விதவிதமான பாடிலேங்குவேஜோட இங்கிலீஸ்ல ஆண்டவரை கூப்பிடுறாரு.. 

அதை பக்கத்துல இருக்குறவரு அதே பாடிலேங்குவேஜோட (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் `கம்பக்ஸ்’ மொழி பெயர்ப்பு காமெடி நினைவுக்கு வரும் :)) தமிழ்ல மொழிப்பெயர்க்கிறாரு.. 

கேமரா கூட்டத்தை நோக்கி திரும்புது. ஆண்டவர் இறங்கியதால் ஆடியன்ஸ்ல பலபேர் அருள் வந்து ஆட்டம் போடுறாங்க.. அப்புறம் மேடைக்கு வந்து அதிசயங்களை சொல்றாங்க.

அந்த சீனைப் பார்த்ததுல இருந்து, அந்த கூட்டத்துக்கு ஒருநாள் போகணும்னு முடிவு பண்ணிருக்கேன். அந்த கம்பெனி ஆட்கள் யாராவது என்னை கூட்டிட்டுப் போக ரெடியாப்பா..

இந்த பாவி மேலயும் ஆண்டவரை நீங்க இறங்க வைக்கணும்.. ஆண்டவர் எப்படி இறங்குறாருனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்..

இது சாம்பிளுக்கு.. மெயிண் பீஸ் நிறைய இருக்கு..
http://www.youtube.com/watch?v=jlNP2e8XUaY

கார்ட்டூனிஸ்ட்.பாலா
11-6-13 

சாதியால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளும் நிலவும் சாதிவெறி..உலகம் முழுக்க புரட்சி நடந்தாலும் இந்தியாவில் புரட்சி நடக்க விடாமல் புரட்சிக்கான எல்லா வாய்ப்புகளையும் தட்டிப் பறிப்பதில் முக்கியமானது சாதி. இந்தியாவில் சாதியும் வர்க்கமும்ஒன்றோடொன்று இணைந்து நிற்கிறது.

இந்தியாவில் மேல் சாதி கீழ் சாதி என இருந்திருக்குமானால் சாதி எப்போதோ ஒழிக்கப்பட்டிருக்கும். ஆனால் பயங்கரவாத மனு இந்தியாவில் படிநிலை சாதியக் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்த படிநிலை சாதிய கட்டமைப்பே சாதியத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

அதன் பயங்கரம் இடைநிலை சாதிக்குள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளும் வேர் விட்டு நிற்கிறது என்பது தான் உண்மை. என்ன ஒப்பீட்டளவில் கொஞ்சம் குறைவாக இருக்கலாம், அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்கள் என்றடிப்படையில் பெரிதுப்படுத்தப்படாமல் இருக்கலாம்.

தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்பதிலிருந்து தடமாறி எல்லா சாதியினரும் தங்கள் சாதியை புனிதப்படுத்த மன்னர்களின் எலும்புக் கூடுகளை தேடி கிளம்பிவிட்டார்கள்.

சாதி வெறி ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளும் பரவியிருக்கிறது என்பதற்கு சிறு உதாரணம் இந்த சம்பவம்..

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிநெல்லினூர் கிராமத்தில் பறையர் சமூகத்தைச் கோகிலா என்ற பெண் கார்த்திகேயன் என்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை காதிலித்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார். இரு சமூகமும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்றாலும் படி நிலையில் அருந்ததியர் சமூகம் கடைநிலையில் இருப்பதால் பெண்ணின் வீட்டாருக்கு ஜீரணிக்க முடியவில்லை.

மர்மமான முறையில் கோகிலா இறந்துப்போகிறார். கார்த்திகேயன் தன் மனைவியை கொன்று விட்டார்கள் என புகார் கொடுத்திருக்கிறார். உண்மையறியும் குழுவினரும் சென்று அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தமாதிரியான சம்பவங்கள் நிகழ அடிப்படைக் காரணம், சாதி மத வர்க்கங்களின் புனிதம் பெண்களின் கற்புக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதே. எல்லா வகையான வெறிக்கும் பலிகடாவாவது பெண்கள் மட்டுமே.

சாதி ஒழிப்பு என்பது, பார்ப்பனியத்திற்கு எதிரானதானதாக மட்டுமல்லாமல் எல்லா சாதிக்கெதிரானதாக இருக்க வேண்டும்.. எந்த வடிவத்திலும் வெளிப்படும் சாதிவெறி கண்டிக்கப்பட வேண்டும்.. அது ஒடுக்குமுறைக்குள்ளாகும் தலித் மக்களின் சாதிவெறியாக இருந்தாலும் கூட..

இல்லையென்றால் தலித் சமூகத்தில் இருந்து நாளை சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு எதிராக உளறும் ஒரு ராமதாஸ் உருவானாலும் ஆச்சரியமில்லை.. :(


-கார்ட்டூனிஸ்ட் பாலா
21-12-2012

Sunday, June 16, 2013

அரசுப் பள்ளி மாணவர்கள் தான் தமிழ்த்தாயை வாழ வைக்கணுமா என்ன.. சும்மா காது குத்தாதீங்கப்பா..!


உங்களுக்கு இந்தப் பதிவு எரிச்சலாகக்கூட இருக்கலாம்.. என்னை தமிழினத்துரோகியாகக்கூட நீங்கள் அழைக்கலாம்..
 

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்றதும் பலர் ``ஐய்யையோ தமிழை கொல்றாங்க..’’ என்று குதிப்பதை பார்த்ததும் இந்த பதிவை எழுதவேண்டும் என்று தோன்றியது.

அரசுப்பள்ளியில் காமராஜர் போட்ட சோத்த சாப்பிட்டு படித்தவன் நான். நான் படித்த பள்ளியில் எங்களுக்கு வாய்த்த ஒரு சில ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் என்ன லட்சணத்தில் இருந்தார்கள் என்பதை வெளியில் சொன்னால் அசிங்கம்.

ஒன்றிரண்டை தவிர அரசுப்பள்ளிகளின் லட்சணம் கட்டமைப்பு வசதிகளற்று ஆசிரியர்களின் மெத்தனபோக்குடன் படுமோசமாகவே இருக்கிறது. யூனியன்கள் இருக்கிறது.. நம்மளை எவனும் புடுங்க முடியாது என்றளவிலே பெருவாரியான அரசு ஆசிரியர்களின் மனநிலை மிதப்பில் இருக்கிறது. இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல அரசுத்துறை நிறுவனங்கள் அத்தனையிலும் இதுதான் நிலை...

ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், டாக்டர்கள், காவல்த்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அவர்களின் வைப்பாட்டி புள்ளைகள், பத்திரிகையாளர்கள் உட்பட அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் குழந்தைகள் அனைத்தும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்க, தனியார் பள்ளி வாசலை எட்டிப்பார்க்க முடியாத ஏழைகள் மட்டும் அரசுப்பள்ளிகள் தமிழ் வழியில் படிக்கிறார்கள்.

``அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எல்லாம் எப்படியாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஆசை..

தனியார் பள்ளிகளில் வேலைப்பார்க்கும் ஆசிரியர்களுக்கு எல்லாம் எப்படியாவது அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய, யாரும் கேள்விக் கேட்காத அரசுப் பள்ளியில் ஆசிரியராகிவிட வேண்டும் என்பது தான் லட்சியம்..’’

இந்த முரண்பாடுதான் எல்லாவற்றிற்குமான அடிப்படை. மாணவர்களை ஒழுங்காக படிக்க வைத்தால் தான் சம்பளம் என்ற நிலையில் தேவையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியார் பள்ளிகள் ஒரு பக்கம்,

மெத்தனப்போக்கு கொண்ட, மாதத்தின் முதல் தேதியில் மட்டும் உற்சாகமாக இருக்கும் பெருவாரியான ஆசிரியர்களைக் கொண்ட அடிப்படை கழிவறை வசதிக்கூட இல்லாத அரசுப்பள்ளிகள் ஒருபக்கம் என்று சமனற்ற நிலையில் இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் அரசுப்பள்ளி மாணவர்களிடம் மட்டும் தமிழ்த்தாய் உயிருடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி..?

பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் பெருவாரியான நாடுகளில் ஆங்கிலம் என்பது தவிர்க்கவே முடியாத ஒருவிசயம்.. இந்தியாவைப் பொருத்தளவில் அது வருவாய்க்கான மொழி.

இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். திராவிட நாடு கேட்டு போராடினார்கள். மொழி வழி மாநிலங்களை உருவாக்கி அதற்கு ஆப்பு அடித்தது இந்தியம். அதற்கான வாய்ப்பு இல்லை.. இந்தியாவின் காலை நக்கித்தான் பிழைக்க வேண்டும் என்று நிலை உறுதி செய்யப்பட்டப் பிறகு தலைவர்கள் அடுத்த தலைமுறைகள் இந்தியாவில் வாழ்வதற்கு என்ன மொழிகளை தெரிந்திருக்க வேண்டுமோ அதுபற்றி யோசித்திருக்க வேண்டும். பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்று எவன் சொன்னான்.

தமிழகத் தலைவர்கள் தமிழ் தமிழ் என்று மைக்கில் வெற்றுச் சவடால்கள் விட்டு சீன் போட்டுக் கொண்டிருக்க.. அண்டை மாநிலமான கேரளா இந்தியாவை ஏற்றுக்கொண்டு இந்தியையும் ஆங்கிலத்தையும் சேர்த்து படித்தார்கள். இன்று டெல்லியை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு மொழிகள் கற்றுக்கொள்வதன் பலன் குறித்த உதாரணத்திற்கு மட்டுமே இதை சொல்கிறேன்.

நாம தமிழையும் ஒழுங்காக அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்காமல் ஆங்கிலத்தையும் ஒழுங்காக படிக்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறோம்.

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்றதும் ``புலியை சீண்டிப்பார்க்கிறார்கள்..’’ என்று இன்று சீன்போடும் கருணாநிதி தான் ``தயாநிதி மாறனுக்கு இந்தி நல்லாத்தெரியும் என்பதால் டெல்லிக்கு அனுப்பினேன் ’’ என்று வெட்க்கமில்லாமல் சொன்னவர். பல ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக இருந்த இந்த யோக்கிய சிகாமணி தன் வாரிசுகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து மக்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கலாமே..

ஜப்பான், கியூபா போல் தமிழ்நாடு தனி நாடாக இருந்திருக்குமேயானால் வெறும் தமிழ் மட்டும் போதும் என்று நிர்ணயித்திருக்கலாம். ஆனால் பல்வேறு கூட்டு தேசிய இனங்கள் வாழும் இந்தியாவில் நீங்கள் வெறும் தமிழை படித்துக்கொண்டு வெளிநாடு வெளி மாநிலம் மட்டுமல்ல.. தமிழ் நாட்டிலும் எதையும் கிழிக்க முடியாது. அந்த லட்சணத்தில் தான் தமிழில் படித்தவனுக்கு தமிழ் நாட்டிலேயே மரியாதை.

தாய் மொழி வழிக் கல்வி தான் சிறந்தது. ஆனால் அது எல்லோருக்கும் பொதுப்படையாக இருக்க வேண்டும். நீங்கள் தனியார் பள்ளிகளிலும் தாய் மொழி வழிக்கல்வி என்ற சட்டத்தை கொண்டு வாருங்கள்.

அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதியான கழிவறைக்கட்டிக் கொடுக்க துப்பில்லாத ஜெயாவின் அரசு தமிழர்களை ஏமாற்ற 100 கோடியில் தமிழ்தாய்க்கு சிலை வைக்கப்போவதாக அறிவிக்கிறது.

நன்றாக கவனித்துப்பார்த்தால், பெரும்பாலும் ஆங்கிலம் படித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சொகுசாக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் தான் `ஆங்கிலம் தெரியாததால் ஒன்றும் குடி முழுகவில்லை’ என்று ஏழை மக்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.

தமிழ் மொழி நிலைக்க வேண்டுமானால் தமிழன் வாழ வேண்டும். அவன் வாழ வேண்டுமானால் தமிழ் படித்த அவன் வாழ்வாதாரத்திற்கு வேலை வேண்டும். இது எதையும் செய்யாமல் சும்மா அரசுப்பள்ளி மாணவர்களிடம் மட்டும் தான் தமிழை வாழ வைக்க வேண்டும் என்று போராடுவீர்களானால் அது அயோக்கியத்தனம்.

அது தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து விட்டு அதனாலயே அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, ஆங்கிலம் தெரியாத காலம் காலமாக ஒடுக்கப்பட்ட குப்பன்களையும் சுப்பன்களையும் பியூனாக உருவாக்கி வைக்க மட்டுமே பயன்படும்..

ஒட்டுமொத்தமாக கல்வியை அரசு கைப்பற்ற வேண்டும். ஆசிரியர்களிலிருந்து அதிகார மட்டத்தின் அத்தனை ஆட்களும் அரசுப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும். அதுவே அரசுப்பள்ளி மேம்படுவதற்கான வழி. கல்விக்கொள்ளையர்களிடமிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதற்கும் அதுவே தீர்வு.

தனியார் பள்ளிகளில் நிர்வாகத்திற்கு பயந்து கொண்டு ஒழுங்காக பாடம் நடத்தும் அதே ஆசிரியர்கள் அரசுப்பள்ளிக்கு வந்ததும் ஏன் திருடர்களாகிறார்கள்.. கோளாறு எங்கே இருக்கிறது புரிகிறதா.. அரசு வேலை.. நம்மை எவனும் கேள்வி கேட்க முடியாது என்று சூழல் கொடுக்கும் மிதப்பு.

அது என்ன அரசுப்பள்ளி மாணவர்கள் தான் தமிழ்த் தாயை வாழ வைக்கணுமா என்ன.. ஏன் தனியார் பள்ளி மாணவர்கள் தமிழில் படித்தால் உங்கள் தமிழ்த்தாய் சூசைட் பண்ணிக்குவாளா.. சும்மா காது குத்தாதீங்கடே.. முடிஞ்சா அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் வழியில் பாடம் நடத்த போராடுவோம்.. இல்லையென்றால் அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கில வழிக்கல்வி படிப்பதில் தப்பே இல்லை.. 

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
16-5-13

நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்.. !


சென்னையின் ஜன நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி (sales girl) ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார்.
 

பகலெல்லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட்டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொதுகழிப்பறைகள் எதுவும் கிடையாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை.

ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும்போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட்டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார்.

அதன்பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள். நேற்று இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்தபோது ஆத்திரமாக விவரித்தார்.

அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான்.

ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத்தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமானகரமாக உணர்ந்திருப்பார்.

சென்னையில் ஜன நெருக்கடியான பகுதிகளுக்குள் சுற்றும்போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.. வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ?
பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் சாராயக்கடையை திறந்து வைத்திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொதுகழிப்பறைகளை திறந்து வைக்கவில்லை.

அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான்.

ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் நிலை? பள்ளி கல்லூரிகளில் பெண் பிள்ளைகளின் நிலை இன்னும் பரிதாபம்.

மேலோட்டமாக பார்த்தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க டாய்லெட்டை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மனநிலை எவ்வளவு மோசமானது.

மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி. கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்னை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை.

மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு டாய்லெட் அறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக சாக்குதான் இருக்கும்.

அதே மும்பையில் பணக்கொழுப்பெடுத்த அம்பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் டாய்லெட்டும். (வித்தியாசமா கக்கா இருப்பாய்ங்களோ !)

இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக்களுக்கு டாய்லெட் கட்டிக்கொடுங்கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்..

எப்போதாவது செல்லும் இறைவழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவசியமான கழிவறைகளுக்கு இடமில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்கமுமில்லை.. 

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
23-4-13